கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை
சேந்தமங்கலம், அக்.23: எருமப்பட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில், கழிவுநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கைக் கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஆதிதிராவிடர் மற்றும் இந்திரா நகர் பகுதி மக்கள், கலெக்டர் துர்காமூர்த்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொட்டிரெட்டிப்பட்டி ஆதிதிராவிடர் மற்றும் இந்திரா நகர் குடியிருப்புகளில், மழைக்காலத்தில் கழிவுநீருடன் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்குவதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது. மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் இடத்தில் அமைக்காமல், வேறு இடத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதால், தண்ணீர் அஎளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.