சாக்கடை அடைப்பால் தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு அருகே, சாக்கடை தூர்வாராததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், 87.கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டில், விசைத்தறிகள் அதிகமுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து நிறுத்தத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய், தூர்வாராமல் கழிவுநீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வழிந்து பொதுமக்கள் செல்லும் சாலை முழுவதும் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.