மாவட்டத்தில் பரவலாக மழை
நாமகிரிப்பேட்டை, செப்.19: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகல் வேளையில் வெயில் அடிப்பதும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளது. வெண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை சுமார் 6 மணிக்கு மிதமான மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கனமழை கெட்டியது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் பகுதியில் பலத்த மழைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவ -மாணவிகள் அவதிக்குள்ளாகினர். வெண்ணந்தூர் பகுதியில் மானாவரி பயிராக மரவள்ளி, நிலக்கடலை, சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.