சேந்தமங்கலத்தில் குதிரை வாகனத்தில் சுவாமி ஊர்வலம்
சேந்தமங்கலம், செப்.19: சேந்தமங்கலம் பெருமாள் கோயிலில் உள்ள கிருஷ்ணர், ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி அன்று முத்துப்பல்லக்கில் புதன்சந்தை அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. கோகுலாஷ்டமி அன்று சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து முத்துப்பல்லக்கில் கிருஷ்ணர் புறப்பட்டார். சாலையூர், பொட்டணம் வழியாக நைனாமலையை சென்றடைந்தார். தொடர்ந்து அங்குள்ள பாத மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்து பொட்டணம் மாரியம்மன் கோயிலில் இரவு தங்கி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதிகாலை வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, கிருஷ்ணர் குதிரை வாகனத்தில் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.