எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்த அதிமுக பேனர்கள் கிழிப்பு
நாமக்கல், செப்.17: நாமக்கல்லில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைத்திருந்த அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசாரத்திற்கு வரும் 20ம் தேதி நாமக்கல் வருகிறார். இதையொட்டி, அவரை வரவேற்று நாமக்கல்லில் பல்வேறு இடங்களில், அதிமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். அதிமுக மாநில வர்த்தகரணி இணை செயலாளர் தேவி மோகன் சார்பில், சேலம் ரோட்டில் பல்வேறு இடங்களில் சாலையோரம் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். இதில், ஒரு சில வரவேற்பு பேனர்களை, நேற்று முன்தினம் இரவு சிலர் கிழித்து எறிந்துள்ளனர். இதனால், அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், அதிமுக உள்கட்சி மோதலில் பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதா அல்லது வேறு யாராவது கிழித்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.