ரோட்டில் கேரம் போர்டு விளையாடியதில் மோதல்
நாமக்கல், அக்.16: நாமக்கல் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ரோட்டில் கேரம் போர்டு வைத்து விளையாடியதில் ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட பலர் தாக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாலிபர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி சரண்யா(34). இவர் கடந்த 5ம் தேதி மதியம் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்லும்போது ரோட்டில், அதே ஊரை சேர்ந்த 3 பேர் ரோட்டை மரித்து கேரம் போர்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதை சரண்யா கண்டித்துள்ளார். இதற்கு அவர்கள் சரண்யாவை திட்டியுள்ளனர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ரோட்டில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களுக்கும், அரிகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் அரிகிருஷ்ணனை, வாலிபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பதிலுக்கு அரிகிருஷ்ணனும் அவர்களை தாக்கியுள்ளார். இதையடுத்து சரண்யா, அரி கிருஷ்ணனின் மனைவி சசியை அழைத்துக்கொண்டு அந்த வாலிபர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர்கள், சரண்யாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். மேலும் 2 பேர் சரண்யாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதுகுறித்து சரண்யா, நந்தகுமார் ஆகிய இருவரும் நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் இருதரப்பினரும் மீது வழக்குபதிவு செயது விசாரணை நடத்த வந்தனர். இந்த வழக்கில், சாரதி(22), நவீன்குமார்(20), கார்த்தி(31), அரிகிருஷ்ணன்(30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.