100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
மல்லசமுத்திரம், ஆக.13: தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்கக்கோரி, விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மல்லசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்லசமுத்திரம் பிடிஓ அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமாபுரம் கிராமம், கொசவம்பாளையம் மற்றும் பூசாரிக்காடு பகுதிகளில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தொடர்ச்சியாக 100 நாள் வேலை வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வேலை வழங்காமல் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மத்திய அரசு 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு அறிவித்த ரூ.336 சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேலு ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் வரதராஜ், சிவக்குமார், தங்கம்மாள், தமிழ்ச்செல்வி, நளினி, ஜீவிதா உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.