போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு, ஆக.12: திருச்செங்கோட்டில், நகர காவல்துறை மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியில் தொடங்கிய பேரணியை, திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போதை அழிவுக்கான பாதை, போதை இல்லா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு தட்டிகளை மாணவ, மாணவிகள் ஏந்தி வந்தனர். பான் மசாலா, குட்கா போன்றவற்றை விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை விற்பதும் பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வாலரைகேட் பகுதியில் தொடங்கிய பேரணி தாலுகா அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்த முழக்கங்களை எழுப்பினர்.