மக்கள் குறைதீர் கூட்டத்தில் 569 மனுக்கள் குவிந்தன
நாமக்கல், ஆக.12: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, மொத்தம் 569 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,41,667 மதிப்பில் வங்கி கடன் மானிய ஆணை, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,840 மதிப்பில் தையல் இயந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.