படிப்பை பாதியில் நிறுத்தி பிளஸ் 1 மாணவிக்கு திருமணம்
கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரி அருகே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் கணவர், பெற்றோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கோமளா, பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கொப்பக்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவரது படிப்பை பாதியிலேயே அவரது பெற்றோர் நிறுத்தினர். அதன் பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி-மாதம்மாள் ஆகியோரின் மகன் வெங்கடேசன்(24) என்பவருக்கும், அந்த சிறுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த 27ம்தேதி, பாலேகுழி பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் அவர்களது திருமணம் நடந்தது. இது குழந்தை திருமணம் என்பதால் இதுபற்றி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில், சிறுமியை திருமணம் செய்த வெங்கடேசன், அவரது பெற்றோர் ராமசாமி, மாதம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை பச்சையப்பன், தாய் சாவித்ரி ஆகிய 5 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.