ராஜநாகலட்சுமி அம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா
நாமக்கல், ஆக.9: மோகனூர் அருகேயுள்ள ராசிபாளையம் மாருதி நகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, நேற்று ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. அதைத்தொடாந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்பட்டது. மஞ்சள், குஞ்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டு, 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.