சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது
பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் அருகே சந்து கடையில் மதுவிற்ற 2 பேரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு 24 மணிநேரமும் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் டிஎஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சட்ட விரோதமாக நடைபெறும் மதுவிற்பனை செய்வோரை கண்டறிந்து வழக்குபதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வெப்படை எஸ்ஐ சங்கீதா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பாதரை டாஸ்மாக் கடை பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்யப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
மது விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் (50) என்பவரை கைது செய்த ேபாலீசார், அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார், காந்திபுரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, முதல்வீதியை சேர்ந்த தேவராஜன்(55) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தேவராஜனை கைது செய்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.