தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்
பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் நான்குசாலை பகுதியில் காலை மாலை நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பியபடி அசுர வேகத்தில் செல்கின்றன. குறுகலான சாலையில் கூட்டம் மிகுந்த நேரத்தில் அசுர வேகத்தில் வரும் பேருந்துகள் ஏர்ஹாரன்களை அலறவிட்டு மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால், டூவீலரில் வருவோர் பலரும் இந்த இரைச்சலில் பதட்டமடைந்து விபத்தில் சிக்குகின்றனர். காலையில் பள்ளி கல்லூரி நேரங்களில் இளைஞர்கள் பலரும் டூவீலர்களில் உள்ள சைலன்சர்களின் மப்ளர்களை கழற்றி விட்டு வானங்களை அலற விட்டபடி செல்கின்றனர். இதுகுறித்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து. டிஎஸ்பி கௌதம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பள்ளிபாளையம் நான்கு சாலை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்துகள் ஏர்ஹரனை அலறவிட்டபடி வந்தன. வாகனங்களை சோதனையிட்ட போலீசார் அதிக ஒலி எழுப்பியபடி வந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்களின் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்தனர்.