ராசிபுரம் நகராட்சியில் கடை டெண்டர் ரத்து
ராசிபுரம், டிச.5: ராசிபுரம் நகராட்சி சார்பில், ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், ரூ.5.75 கோடி மதிப்பில், 20க்கும் மேற்பட்ட கடைகள், பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கடைகளை டெண்டர் விட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. பணிகள் முடியாத நிலையில், கடைகளை டெண்டர் விடக்கூடாது என எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. நேற்று ஏலம் நடக்க இருந்ததால், பொதுமக்கள் வணிகர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், டெண்டர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘பணிகள் முழுவதும் முடிவதற்குள் ஏலம் விட்டால் குறைந்த வாடகைக்குதான் செல்லும். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், மீண்டும் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.