தேடப்படும் குற்றவாளி குறித்து போஸ்டர்
பள்ளிபாளையம், ஆக.5: நாமக்கல் மாவட்டம், மொளசி காவல்நிலைய எல்லையில் கடந்த 2010ல் வீடு புகுந்து நகை திருடப்பட்டது. இந்த வழக்கில் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த வீரப்பனம் மகன் சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியில் வந்த சுப்பிரமணி கடந்த 2023 பிப்ரவரி மாதம் 18ம் தேதியிலிருந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரது வீட்டில் சம்மன் கொடுக்கப்பட்டும், சுப்பிரமணி தொடர்ந்து விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், கோர்ட் சுப்பிரமணியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் சுப்பிரமணியை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சுப்பிரமணி குறித்த விவரங்கள் கிடைக்காததால், பொது இடங்களில் சுப்பிரமணி குறித்த விபரங்களை அச்சிட்டு போஸ்டர்களாக பொது மக்கள் பார்வையில் படும் வகையில் ஒட்டி வருகின்றனர்.