மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாட்டம்
சேந்தமங்கலம், டிச.4: புதுச்சத்திரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தினவிழா விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார வள மையத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், ‘பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை வலியுறுத்தி, அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சலுகை, மானியங்கள் வழங்கி வருகிறது. மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது,’ என்றார்.
முன்னதாக ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாட்டு பாடுதல், நடனமாடுதல், தனி நடிப்பு, கதை சொல்லுதல், சைகை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மணிமேகலை, அகத்தியன், சிறப்பு பயிற்றுநர்கள் செல்வராஜ், சரசு தர்மாமணி இயன்முறை மருத்துவர் ராஜேஸ்வரி, பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.