பூஜையுடன் தொடங்கிய பருத்தி ஏலம்
ராசிபுரம், டிச.2: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அதிகளவு பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் பருத்தியை விவசாயிகள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய, ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கவுண்டம்பாளையம் கிளையில் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. பருத்தி சீசன் முடிந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் பருத்தி ஏலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது பருத்தி சீசன் தொடங்கியதால், நேற்று மீண்டும் பருத்தி ஏலம் தொடங்கியது. முன்னதாக ஏலம் தொடங்கும் முன்பாக பருத்தி மூட்டைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் புதுப்பாளையம். சிங்களாந்தபுரம், காக்காவேரி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், தங்களது பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 269 மூட்டை பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். ஏலத்தில் ஆ.சி.எச்., ரகம் பருத்தி மூட்டை அதிகபட்சமாக ரூ.7,769க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,892க்கும் விற்பனையானது. கொட்டு ரகம் பருத்தி மூட்டை அதிகபட்சமாக ரூ.3,500க்கும், குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரத்துக்கும் விற்பனையானது. ஒட்டுமொத்தமாக ரூ.7 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.