தெருநாய்கள் பிடிக்கும் பணி மீண்டும் துவக்கம்
பள்ளிபாளையம், அக்.26: பள்ளிபாளையம் நகராட்சியில் எஞ்சியள்ள தெருநாய்களை பிடிக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது. 10 நாட்களில் 406 நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெளியில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதாகவும், வீதிகளில் படுத்திருக்கும் நாய்கள் கூட்டமாக சென்று பொதுமக்கள், கால்நடைகளை கடித்து ஆபத்தை ஏற்படுத்துவதாக, நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் தொடர்ந்து புகார்கள் செய்தனர்.
இதையடுத்து நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதியில் 1,303 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்தது. இந்த நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. கடந்த ஓராண்டில் மூன்று முறை, தெருநாய்களை பிடிக்கும் பணிகள் நடைபெற்றது. இதில் 897 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டு, நாய்களை பிடித்த இடங்களிலேயே மீண்டும் விடப்பட்டது. இதனால் நாய்களின் இனப் பெருக்கம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் மீதமுள்ள 406 நாய்களையும் முழுமையாக பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்திட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நாய் பிடி குழுவினர் பள்ளிபாளையத்தில் முகாமிட்டு, நேற்று நாய்களை பிடிக்கும் வேலையில் இறங்கினர். வரும் 10 நாட்களில் மீதமுள்ள 406 நாய்களையும் பிடிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.