தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் நாமக்கல்லில் நடக்கிறது
நாமக்கல், செப்.3:நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் வரும் 9,10ம் தேதிகளில் நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இப்பயிலரங்கில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்(அ) உதவியாளர்(அ) இளநிலை உதவியாளர்(அ) தட்டச்சர் நிலையில் உள்ள அரசுப் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும், 10ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், கலெக்டர் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுடன் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.