நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்
நாமக்கல், செப்.3: நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது. செப். 3ம் தேதி(இன்று) முதல் வரும் 7ம் தேதி தேதி வரை 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 33 முதல் 34 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 25 டிகிரி செண்டி கிரேட்டாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 45 முதல் 85 சதவீதம் வரை இருக்கும். செப். 3ம் தேதி(இன்று) 4 மில்லி மீட்டர், 4ம் தேதி 4 மில்லி மீட்டர், 5ம் தேதி 4 மில்லி மீட்டர், 6ம் தேதி 4 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கால்நடைகளை தாக்கும் புற ஒட்டுண்ணிகளில் உண்ணித்தாக்கம் பண்ணையாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். பொதுவாக உண்ணித்தாக்கம் மழைக்காலங்களில் அதிகமாக காணப்படும். உண்ணிகள் கால்நடைகளை கடித்து ரத்தம் உறிஞ்சுவதால் ரத்த சோகை ஏற்படுத்துவதுடன், பல நோய்க்கிருமிகளை கால்நடைகளுக்கு பரப்புவதால் உற்பத்தி திறன் குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. உண்ணிகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுவாக பூச்சிக்கொல்லி மருந்துகளான சைபர்மெத்திரின், டெல்டா மெத்திரின், புளுமெத்திரின் மற்றும் ஐவர்மெக்டின் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.
தற்போது, தொடர் மழை பெய்து வருவதால், ஆவணிப்பட்டம் விதைப்பு செய்துள்ள பயிர்களில், வேர் அழுகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த நோய் பரவாமல் தடுக்க டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சாணக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கலந்து செடியின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். மேலும், இனிமேல் பயிர் செய்ய உள்ள விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நெல் நடவு செய்யவுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு 10 கிலோ நுண்ணூட்டக் கலவையை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றி நடவு மேற்கொள்ளும்போது அடியுரமாக இட வேண்டும்.
இதனால், நன்கு வேர் பிடித்து அதிக தூர் பிடிக்கும்.மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், ஈரத் தன்மையை பயன்படுத்தி பருத்தி, நிலக்கடலை, பயறு வகைகள் போன்ற பயிர்களுக்கு பென்டிமெத்திலின் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 700 மி.லி. என்ற அளவிலும், மக்காச்சோளத்திற்கு அட்ரசின் என்ற களைக்கொல்லியை தகுந்த அளவிலும் விதைப்பு செய்த 3 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.