மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6.67 கோடியில் எத்தனால் உற்பத்தி பிரிவு சீரமைப்பு பணி இன்று துவக்கம்; 2 அமைச்சர்கள் பங்கேற்பு
நாமக்கல், செப்.3: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.6.67 கோடியில் எத்தனால் உற்பத்தி பிரிவு சீரமைப்பு பணிகள் துவக்க விழா இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயங்கி வரும் எத்தனால் உற்பத்தி பிரிவை விரிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எத்தனால் உற்பத்தி அலகை சீரமைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.6.67 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். தற்போது, தினசரி 30 ஆயிரம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி அலகின் திறனை அதிகரிப்பதன் மூலம், தினமும் 50 ஆயிரம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்படும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சர்க்கரை ஆலைக்கு ரூ.6.67 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
எத்தனால் உற்பத்தி அலகு சீரமைப்பு மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பு பிரிவு அமைக்கும் பணிகள் துவக்க விழா செப்.3ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழக சர்க்கரைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, எத்தனால் உற்பத்தி விரிவாக்க பிரிவு கட்டுமானப் பணிகளை துவக்கி வைக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் மூலம் எத்தனால் கூடுதல் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். எத்தனால் கூடுதல் உற்பத்தியின் மூலம் சர்க்கரை ஆலையின் வருவாய் அதிகரிக்கும்.
இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகை உடனுக்குடன் வழங்க இயலும்.
மேலும், ஆலை லாபத்தில் செயல்பட்டு தற்சார்பு நிலையை அடையும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி பிரிவில் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள மோகனூர் உள்பட 11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இணை மின் உற்பத்தி திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினர் அந்த பணிகளை செய்யாமல் விட்டுவிட்டனர்.
திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டம் என்பதால், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது, மீண்டும் இணை மின் திட்டப்பணிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள இணை மின் உற்பத்தி திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார். அப்போது, மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவாளர் ராணா.ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.