பல்லாங்குழி சாலையை சீரமைக்க நடவடிக்கை
நாமகிரிப்பேட்டை, செப்.2: வெண்ணந்தூர் அருகே வடுகம்பாளையம் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம், மின்னக்கல் பஞ்சாயத்து வடுகம்பாளையம் 6வது வார்டு, கீழ் தெருவில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக சாலை வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் சிறிது நேரம் மழை பெய்தால் கூட, தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால், பள்ளி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் குண்டும், குழியுமான சாலையால் அவதிக்குள்ளாகி வருகிறோம். சாலையை சீரமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஓராண்டுக்கு முன்பு பள்ளமான இடங்களில் மண் கொட்டி சரி செய்தனர். ஆனால், மழை பெய்யும் சமயங்களில் மண் கரைந்து சகதி காடாக மாறி விடுகிறது. சாலை முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் அரை அடி ஆழத்திற்கு பள்ளம் காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சகதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.