தொடர் மழையால் நெல் வயலில் தேங்கிய நீர்
சேந்தமங்கலம், டிச.1: எருமப்பட்டி வட்டார பகுதியில் தொடர் மழையின் காரணமாக வயலில் தேங்கியுள்ள மழை நீரால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எருமப்பட்டி வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பவித்திரம், பவித்திரம்புதூர், நவலடிபட்டி, முட்டாஞ்செட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி, கோம்பை, முத்துகாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் ஐப்பசி மாத பட்டத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்தது. தற்போது புயலின் காரணமாக கடந்த 3 நாட்களாக இப்பகுதியில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மழைநீர் முழுவதும் நெல் வயலில் தேங்கியுள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எருமப்பட்டி கொல்லிமலை அடிவார பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளோம். ஐப்பசி மாத பட்டமாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது புயலின் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால், மழைநீர் முழுவதும் வயலில் தேங்கியுள்ளது. வரப்பை வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். வெளியேற்றப்படும் தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள சோளத்தீவன வயலுக்கு செல்வதால் சோள பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நெல் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.