தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு
நாகப்பட்டினம், ஆக.21: நாகப்பட்டினத்தில் இரண்டு இடங்களில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.90 லட்சம் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. நாகப்பட்டினம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.65 லட்சம் மதிப்பிலான நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அந்த இடத்தை மீட்கக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுததி வந்தனர்.
இதையடுத்து, நாகப்பட்டினம் இணை ஆணையர் ராஜாஇளம்வழுதி தலைமையில், தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) ஜெயபாலன், கோயில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த கோயில் நிலம் மீட்டனர். அதே போல் நாகப்பட்டினம் அருகே பொரவச்சேரியில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான இடம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்த இடத்தை மீட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.