அறுவடை மிஷின் வாடகை விலையை வெளியிட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
தரங்கம்பாடி, ஆக. 20: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் குறுவை அறுவடை துவங்கிவிட்டதால் விவசாயிகள் அறுவடை மிஷின் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை மிஷினுக்கு பழைய வாடகையா அல்லது புதிய வாடகை அறிவிக்கபடுமா என்று விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.
பொறையார், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்து கட்டிசாத்தனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நெடுவாசல், திருவிளையாட்டம், ஈச்சங்குடி, கடலி, தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பல பகுதிகளில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். சாகுபடி செய்யபட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலைக்கு வந்த நிலையில் நேற்று முதல் விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடை மிஷினுக்கு கடந்த ஆண்டு 1 மணி நேரத்திற்கு 2,550 ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்திருந்தது. இந்த ஆண்டும் அதே தொகை தொடருமா அல்லது புதிய வாடகை அறிவிக்கபடுமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டரும், வேளாண்மைதுறையும் இதில் கவனம் செலுத்தி அறுவடை மிஷினுக்கான வாடகையை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.