வேதாரண்யம் பகுதியில் ஒரே நாளில் 17 செ.மீ மழை சம்பா சாகுபடி செழிப்பாகும்
வேதாரண்யம், நவ. 19: வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக 5,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா சாகுபடி செழிப்பாக வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக வேதாரண்யம் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன்பாக வேதாரண்யம் ஒன்றியத்தில் சுமார் 50,000 ஏக்கரில் மானாவாரி நேரடி நெல் விதைப்பின் மூலம் விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு இருந்தனர். போதுமான தண்ணீர் இன்றி பயிர்கள் வளராத சூழ்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளான தாணிக்கோட்டகம், வாய்மேடு, ஆயக்காரன்புலம், கடினல் வயல், தென்னம்புலம் செம்போடை, தேத்தாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் பச்சை கட்டி வளரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற உரங்களை தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த வடகிழக்கு மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.