சென்னை, நாகை தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
தரங்கம்பாடி, செப். 18: மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குதிரைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமபடுகின்றனர். சென்னையில் இருந்து நாகை செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சென்னையில் இருந்து காரைக்கால், நாகூர், நாகை, வேளாங்கன்னி, திருநள்ளார் உள்ளிட்ட பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
அது போல் சென்னைக்கும் அதிகமானவர்கள் செல்கின்றனர். அந்த பகுதியில் திருக்கடையூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், உள்ளிட்ட ஊர்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் இருப்பதால் உள்ளுர் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அந்த சாலையில் செல்கின்றனர்.
இந்த சாலையில் காழியப்பநல்லூர் பகுதியில் குதிரைகள் சுற்றி திரிகின்றன. வேகமாக செல்லும் போது குதிரைகள் குறுக்கே வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகிறார்கள். சம்மந்தபட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறபடுத்த வேண்டும். மீண்டும் சாலையில் குதிரைகள் திரியாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.