முதல் தேதியே சம்பளம் வழங்க கோரி சிஐடியு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
நாகப்பட்டினம், செப். 18: மாதந்தோறும் முதல் தேதி சம்பளம் வழங்க கோரி நகராட்சி சிஐடியு தூய்மை பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் நகராட்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நகர எல்லையில் தூய்மை பணி செய்வதற்காக தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 188 தூய்மை பணியாளர்கள், 35 ஓட்டுநர்கள் ஆகியோரை நியமனம் செய்துள்ளது.
இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதி ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கும். இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான ஊதியம் நேற்று(17ம் தேதி) வரை வழங்கப்படவில்லை. இதனால் ஒப்பந்த தூய்மை பணியாளர் நேற்று நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.
பிஎப் பிடித்தம் செய்யும் தொகையை முறையாக வரவு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் லீனாசைமன் தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.