வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி
வேதாரண்யம், ஆக.18: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சேலத்தை சேர்ந்த 157 சிவனடியார்கள் உழவாரப்பணி மேற்கொண்டனர். வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும். இங்கு சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்ததும், மூடிக்கிடந்த கதவை தேவாரம் பாடி திருநாவுக்கரசு திறந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலுக்கு சேலத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் 157 பேர் வருகை தந்து தூய்மை பணி மற்றும் உழவாரப் பணியை சிவனடியார் சொந்தங்கள் சங்கத்தை சேர்ந்த அசோக்குமார் தலைமையில் மேற்கொண்டனர். கோயில் கொடிமரம், பிரதான மகர தோரணவாயில், அம்மன் சன்னதி, வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணியை மேற்கொண்டு ஆலய பயன்பாட்டிற்காக உள்ள பூஜை பொருட்களையும் தூய்மைப்படுத்தினர். பின்பு உலக நன்மை வேண்டி விளக்கேற்றி கோளறு பதிகம் பாடி வேதாரண்யஸ்வரர் சுவாமியை வழிபட்டு சென்றனர்.