கீழ்வேளூரில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
கீழ்வேளூர், நவ. 13: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வருவாய்துறை சார்பில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்)விழிப்புணர்வு இருச்சக்கர வாகன பேரணி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ள இந்த பணியால் அரசியல் கட்சி மற்றும் பொது மக்களிடையே குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக வருவாய்துறை சார்பில் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் கவிதாஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பேரணியானது கீழ்வேளூர் கடைத்தெரு, கூத்தூர், குருக்கத்தி நீலப்பாடி, கானூர் வரை சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இதில் கீழ்வேளூர் தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்களர் பதிவு அலுவலர் ராஜேஷ்வரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் தேர்தல், வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.