தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பல்
கொள்ளிடம், செப். 12: கொள்ளிடம் அருகே விநாயகக்குடி கிராமத்தில் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள் பதி ஊராட்சியை சேர்ந்த விநாயகக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச்சேர்ந்த தொழிலாளி திருமால் என்பவரின் மகள் முத்துலட்சுமி(23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அடுப்பறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த கூரையில் பட்டு எரிய ஆரம்பித்தது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.