வகுப்பறையில் மாணவர்களை இழிவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
நாகப்பட்டினம், ஆக.7: நாகப்பட்டினத்தில் சமூகத்தின் பெயரை சொல்லி வகுப்பறையில் மாணவர்களை இழிவாக பேசிய அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நாகப்பட்டினம் வ.உ.சி. சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மரியம் பிரான்சிஸ் என்பவர் கடந்த 1ம் தேதி வகுப்பறையில் மாணவர்களை சமூகத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் உள்ளிட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, ஆசிரியர் மரியம் பிரான்சிஸ் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.