பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதி; பச்சைபிள்ளையார் கோவில் தெருவில் சுகாதார சீர்கேடு: நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு
நாகப்பட்டினம், ஜூலை 29: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ், மாவட்ட செயலாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் பச்சை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பச்சை பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த 8 மாதங்களாக பாதாள சாக்கடை வழிந்து ஓடி வருகிறது.
இந்த கழிவு நீர் அருகில் உள்ள குளத்துக்குள் தேங்கி அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு கேடு ஏற்பட்டு, பலர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட நோய்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கழிவு நீர் வெளியேறாமல் தடுக்க பாதாள சாக்கடையை சரி செய்ய வேண்டும். கழிவு நீர் தேங்கி கிடக்கும் குளத்தை தூர்வார வேண்டும் என தெரிவித்துள்ளனர்.