கூத்தியம்பேட்டையில் உருகுலைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதி: புதிதாக அமைக்க கோரிக்கை
கொள்ளிடம், ஜூலை 29: கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உருகுலைந்த சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் உள்ள ராக்க பெருமாள் கோயிலுக்கு, மெயின் ரோட்டிலிருந்து செல்லும் ஒரு கிலோ மீட்டர் நீள தார் சாலை உருகுலைந்து காணப்படுகிறது. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு செல்ல விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இங்குள்ள கோயிலுக்கு வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவு இந்த சாலை வழியாக தினந்தோறும் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த சாலை மேம்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதன் பின்னர் சாலை மேம்படுத்தாமல் இருந்து வருவதால், கரடு முரடாக இருந்து வருவதுடன், சாலையின் வழியாக நடந்து செல்பவர்கள் கூட சிரமம் அடையும் வகையில் உள்ளது.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அரசு நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து, புதிய தார் சாலை போட வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.