கொன்னகாட்டுப்படுகை கிராமத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
கொள்ளிடம், ஆக.4: கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையை மேம்படுத்த கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில், கீரங்குடி, சோதியக்குடி, சிதம்பநாதபுரம், மாதிரவேளூர், சென்னியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவது போல, பருத்தி பயிரையும் இடைத்தரகர் இன்றி நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை வடரங்கத்திலிருந்து காட்டூர் வரை மேம்படுத்த வலியுறுத்தி வரும் 12ம் தேதி கொள்ளிடத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளை கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.