நகர்புற உள்ளாட்சி தேர்தல் நியமன உறுப்பினர் மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க காலக்கெடு 31ம் தேதி வரை நீடிப்பு : நாகை கலெக்டர் ஆகாஷ் அறிவிப்பு
நாகப்பட்டினம், ஜூலை 25: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறானிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சிகளில் மாற்றுதிறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அளித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை https://tnurbantree.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிகளுக்கு https://tn.gov.in/dtp, https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வரும் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுநாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசித்து வரும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட நகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.