பொதுமக்களை எரிச்சலுக்குள்ளாக்கிய பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்
காரைக்கால், ஜூலை 25: காரைக்கால் பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் தமிழகப் பகுதி மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதில் குறிப்பாக கும்பகோணம், திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தனியார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகள் நகரப் பகுதிகளான திருநள்ளார், திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி வழித்தடங்களில் செல்லும் போது அதிவேகமாக செல்வதோடு, தடை செய்யப்பட் ஏர் ஹாரன்களை பொருத்தி அதிக அளவு ஒலி எழுப்புகின்றன. அதிக ஒலி காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் தொந்தரவு செய்வதாக தொடர் புகார்கள் வந்தன.
நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்தில் அதிவேகமாக இயக்கி தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் அடித்துக் கொண்டு செல்வதாக போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதிக்கு பொதுமக்கள் செல்போன் மூலமாக புகார் வந்தது.
உடனடியாக பேருந்து நிலையத்தில் ஆய்வாளர் லெனின் பாரதி, தமிழக பேருந்துகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தனியார் பேருந்துகள் என 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் சில பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் வைக்கப்பட்டுள்ளதை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பைப் ஹாரன் பயன்படுத்தினால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு பேருந்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வாளர் லெனின் பாரதி ஓட்டுனர்களை கடுமையாக எச்சரித்தார்.