டிச.4 வரை காத்திராமல் வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைக்க வேண்டும்
சீர்காழி, நவ.27: மயிலாடுதுறை மாவட்ட வாக்காளர்கள் தங்களிடம் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை கடைசி நாளான 4.12.2025வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட கேனிக்கரை, மணல்மேடு, சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெரு, சீர்காழி நகராட்சி பகுதியில் உள்ள ஈசானியத் தெருவில் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெறும் பணிகள் நடைபெற்று வருவதையும், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எஸ்ஐஆர் படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் காந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்யவும், மீளப்பெறும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை கடைசி தேதியான 4.12.2025 வரை காத்திராமல் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒரு படிவத்தினை வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், இப்பணியில் வாக்காளுக்கு சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருப்பின் மாவட்ட அளவில் மற்றும் சட்டமன்ற அளவில் கீழ்காணும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்புக்கொள்ளலாம். மாவட்ட அளவில் - தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை. (1950 என்ற எண்ணையும்), சீர்காழி (தனி) - வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், சீர்காழி (04364 270222 என்ற எண்ணையும்), மயிலாடுதுறை - வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மயிலாடுதுறை. (04364 222033 என்ற எண்ணையும்), பூம்புகார் - உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி. (04364 - 289439 என்ற எண்ணையும்) தொடர்பு கொள்ளலாம். வாக்காளர்கள் தங்களிடம் வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து விரைந்து ஒப்படைத்து தங்களது வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார், சீர்காழி நகராட்சி ஆணையர் .மஞ்சுளா, சீர்காழி வட்டாட்சியர் .அருள்ஜோதி கலைஞர் மகளீர்உரிமைத்தொகை துணை தாசில்தார் பாபுமற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.