குத்தாலம் அருகே கழனிவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
குத்தாலம், அக்.26: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கழனிவாசல் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காந்த் பார்வையிட்டு, நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 39,640 ஹெக்டரில் குறுவை சாகுபடி நடைபெற்று இதுவரை 99.77 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் கரீப் பருவம் 2025-2026 ல் 1.9.2025 முதல் 24.10.2025 வரை 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,20,848 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1,05,081 மெ.டன் நெல் மூட்டைகள் நகர்வு செய்யப்பட்டுள்ளது.
சித்தர்காடு, மாணிக்கப்பங்கு, எடமணல் பகுதி -2 ஆகிய அரசு சேமிப்புக் கிடங்குகளில் மொத்தம் 8,641 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வேளாண்மைத்துறையிடமிருந்து குத்தாலம் பகுதியில் உள்ள கிடங்கில் 2,869 மெ.டன், திருச்சம்பள்ளி கிடங்கில் 1,587 மெ.டன் நெல் மணிகள் என மொத்தம் 4,456 மெ.டன் நெல் மணிகள் இப்பருவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.இக்குறுவை பருவத்தில் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் மல்லியம் பகுதியில் தனியார் கிடங்கும் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,000 மெ.டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. தினசரி 1 அல்லது 2 இரயில் தலைப்புகள் மூலம் சராசரியாக 2,000 மெ.டன் முதல் 4,000 மெ.டன் வரை நெல் மணிகள் வெளி மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன. 24,780 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.304 கோடியே, 19,049 அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.