சீர்காழி நகரில் தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம்: உடனடியாக அகற்ற கோரிக்கை
சீர்காழி, அக். 26: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால் தீபாவளி பண்டிகைக்கு வெடி வெடித்த குப்பைகள் பாலித்தீன் பைகள் , அட்டை பெட்டிகள் கழிவு பொருட்கள் பெரும்பாலான இடங்களில் அகற்றப்படாமல் கடந்த சில நாட்களாக தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது.
மேலும் குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். குப்பைகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகளை உடனுக்குடன் அகற்றவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள், கவுன்சிலர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தேங்கிய குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.