கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
கீழ்வேளூர், அக்.23: கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரியில் இயற்கை வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி குறித்த 26 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுவதால் விவசாயிகள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுரில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கையான வேளாண் இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி வருகிற 27.10.2025 முதல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 26 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் 18 முதல் 35 வயதுடைய விவசாயிகள் கலந்து கொள்ளலாம். மொத்தம் 25 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் உள்பட உரிய ஆவணங்களுடன் கீழ்வேளுர் வேளாண்மை கல்லூரிக்கு நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் வருகை பதிவேடு, காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் மூலம் செயல்படுத்தபடவுள்ளதால் பயிற்சி நடைபெறும் 26 நாட்களும் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிகள் வருகை பதிவை உறுதிப்படுத்த வேண்டும்.
பயிற்சியில் இயற்கையாக பஞ்ச காவ்யா, மீன் அமில கரைசல், தேமோர் கரைசல், பூச்சி விரட்டி, பழக் கரைசல் போன்றவை உற்பத்தி செய்தல் குறித்தும், எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும், இடுபொருட்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக முன்னேறுவது பற்றியும் செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 86758 42228 அல்லது 94436 10153 என்ற கைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் ரவி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.