கொள்ளிடம் அருகே புத்தூர் மந்தகரை சாலையை மேம்படுத்த வேண்டும்
கொள்ளிடம், ஆக. 19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புத்தூர் மந்தகரை சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தாமல் இருந்து வந்தது. மழைக்காலங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் இருந்து வந்த நிலையில், இந்த சாலையை மேம்படுத்த கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை மேம்படுத்துவதற்கு முதற்கட்டமாக கருங்கல் ஜல்லிகள் போடப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் புரட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. நடந்து செல்பவர்கள் ஜல்லி கற்களில் தடுக்கி கீழே விழும் நிலை நிலவி வருகிறது. சைக்கிள் மற்றும் பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.