மண்டல அளவிலான போட்டிகளில் பரிசு வென்ற மாணவிகள் நாகை கலெக்டரிடம் வாழ்த்து
நாகப்பட்டினம், டிச.11: நாகை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மண்டல அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றமைக்காக வழங்கப்பட்ட கோப்பைகள் மற்றும் பதக்கங்களை கலெக்டர் ஆகாஷிடம் காண்பித்து வாழ்த்துகள் பெற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு மண்டல அளவிலான போட்டிகள் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 5ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடந்தது. இதில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் இல்ல குழந்தைகள் கைப்பந்து போட்டியில் முதல் இடமும், நடனப் போட்டியில் மூன்றாம் இடமும், பாட்டு போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர்.
வேளாங்கண்ணியில் உள்ள புனித டான்போஸ்கோ இல்ல குழந்தைகள் பாட்டு போட்டியில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்றமைக்காக பெற்ற வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்களை நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆகாஷிடம் காண்பித்து பாராட்டு பெற்றனர்.
அப்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.