வெளிநாட்டில் உள்ள மகன் பெயரில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மதுரையில் போலி நிறுவனம் நடத்தி
வேலூர், ஜூலை 8: மதுரையில் போலி நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் உள்ள மகன் பெயரில் லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக, நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மனு அளித்தார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று டிஆர்ஓ மாலதி தலைமையில் நடந்தது. இதில் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மெக்ரூன் என்ற பெண் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் எங்கள் வீட்டிற்கு ஒரு சம்மன் வந்தது. அதில் எனது மகன் பெயரில் மதுரையில் தொழில் நடப்பதாகவும், அது நவம்பர் மாதம் 2024ம் ஆண்டில் இருந்து செயல்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரிக்க நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது எனது மகன் பெயரில் மதுரை மாவட்டம், அழகர் கோயில் மெயின் ரோடு கே.புதூர் பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வந்ததும், அந்த நிறுவனத்திற்கு எனது மகன் பெயரில் ஜிஎஸ்டி எண் சென்னை மண்டலத்தில், மதுரை 2வது டிவிஷனில் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.
மகன் பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி, பல லட்சங்கள் பரிவர்த்தனை செய்துள்ளனர். அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையாக புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதில் தொழில் ஆரம்பித்ததாக குறிப்பிட்டுள்ள 2022ம் ஆண்டு காலக்கட்டத்தில், எனது மகன் மனநல பிரச்னைக்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதற்கான ஆவணங்களும் எங்களிடத்தில் உள்ளது. எனவே எனது மகன் பெயரில் நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.