மாயமான மாணவிகள் திருப்பூரில் மீட்பு
வேடசந்தூர், ஜூலை 23: அய்யலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது 3 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவிகளையும் தேடி வந்தனர்.
விசாரணையில் மாணவிகள் திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் போலீசார் உதவியுடன் மாணவிகளை மீட்டு ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பெற்றோர்கள் கண்டித்ததால் 3 மாணவிகளும் கோபித்து கொண்டு திருப்பூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.