காதல் திருமணமான 7 மாதத்தில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை; போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு: போளூரில் காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ(21), கூலித்தொழிலாளி. இவர் போளூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை காதலித்து 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரது பெற்றோர் வீட்டிலும் ஏற்காததால், தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், விக்கி எந்த வேலைக்கும் செல்லவில்லையாம். பலமுறை மனைவி வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும் கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மைனர் பெண் கடந்த 30ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பெண்ணின் தந்தை போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த மைனர் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.