3 தளங்கள் கொண்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஆவடி பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர்கள் அடிக்கல்
ஆவடி, ஜூலை 10: ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சா.மு.நாசர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர். சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, பக்தவத்சலபுரத்தில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 48 வழித்தடங்களில் 166 பேருந்துகள், ஆவடி வழியாக 55 பேருந்துகள் என நாள்தோறும் 55 வழித்தடங்களில் 221 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் சுமார் 6 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், இங்கிருந்து செங்கோட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்களுக்கு தொலை தூர அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, ஆவடி மாநகர பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சிஎம்டிஏ சார்பில் நேற்று காலை ஆவடி மாநகர பேருந்து நிலையத்தில் ரூ.36 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் சா.மு.நாசர், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து, 3 தளங்கள் கொண்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஆவடி பேருந்து பேருந்து நிலைய பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழு செயலாளர் பிரகாஷ், ஆவடி மாநகர திமுக பொறுப்பாளர் சன்பிரகாஷ், துணைமேயர் சூரியகுமார், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், நாராயணபிரசாத், ராஜேந்திரன், பொன்விஜயன், மண்டலக்குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி, அமுதா பேபிசேகர், அம்மு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அம்சங்கள்
முனைய
கட்டிட விவரம்:
தரைத்தளம் - 19,800 சதுர அடி.
இடை மாடி - 6,370 சதுர அடி.
முதல் தளம் - 19,840 சதுர அடி.
இரண்டாவது தளம் - 18,700 சதுர அடி.
முதல் தளம்:
வணிகப்பகுதி.
பணியாளர் அறை.
34 படுக்கையுடன் பணியாளர் ஓய்வறை.
பணியாளர் கழிப்பறை.
பொதுமக்கள் கழிப்பறை.
மற்றும் இரண்டாவது தளத்தில் 11,665 சதுர அடியில் வணிகப்பகுதி.
தரைத்தளம்:
ஒரே நேரத்தில் 22 தடம் பேருந்துகள் நிற்கும் 5 நடை மேடை.
200 இருக்கையுடன் பொதுமக்கள் காத்திருப்பு கூடம்.
245 இருசக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி.
நேரக்காப்பாளர்/பயணச்சீட்டு மையம்.
ஊழியர்கள் ஓய்வறை.
இரண்டு கடைகள்.
மின் அறை.
பொதுமக்கள்/மாற்றுத்திறனாளிகள்/ஊழியர்கள் கழிப்பறைகள்.
பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாக தேவைக்கு தலா ஒரு மின்தூக்கி.