அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.17 கோடி மதிப்பில் 36 புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்
அரியலூர், ஜூன் 5: அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.17 கோடி மதிப்பில் 36 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், ரூ.84.14 லட்சம் மதிப்பிலான 8 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளும், ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.4.01 கோடி மதிப்பீட்டிலான பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி, முள்ளுக்குறிச்சி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, தெத்தேரி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தெத்தேரி பேருந்து நிலையம் முதல் மாரியம்மன் கோவில் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அதனைத்தொடர்ந்து ஆலத்தியூர் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி, ஆலத்தூர் ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் கட்டும் பணி, ரூ.2.43 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.3.03 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, அதனைத்தொடர்ந்து கோட்டைக்காடு கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
பின்னர், கோட்டைக்காடு கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கச்சிராயன்பேட்டை கிராமத்தில் ரூ.3.72 லட்சம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும், பின்னர் ஆதனக்குறிச்சி ஊராட்சி, முதுகுளம் கிராமத்தில் ரூ.1.42 லட்சம் மதிப்பீட்டில் பெருமாள் கோயில் முதல் கிழக்கு தெரு வரை பைப் லைன் நீட்டிப்பு செய்யும் பணியையும், தொடர்ந்து முதுகுளம் கிராமம், இருளர் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பின்னர், முதுகுளம் ஆதிதிராவிடர் தெரு பேருந்து நிறுத்தம் அருகில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியையும், தொடர்ந்து முதுகுளம் கிராமம், ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
இதே போல் ஆதனக்குறிச்சி, சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, அசாவீரன்குடிகாடு, நந்தியன்குடிகாடு உள்ளிட்ட கிராமங்களிலும் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் பழனிசாமி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ரவி மற்றும் இதர அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.