திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் மாதந்தோறும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு நாளை தொடங்கி வைக்கிறார்
திருவண்ணாமலை: தூய்மை அருணை அமைப்பு சார்பில், தூய்மைப்பணி மரம் நடுதல், நீர் நிலை பராமரித்தலோடும், மாதந்தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடக்கிறது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம், துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அமைப்பாளராகக் கொண்டு, தூய்மை அருணை திட்டம் செயல்பட்டு வருகிறது.
தூய்மை அருணை திட்டத்திற்கு 4 மேற்பார்வையாளர்களும், 39 வார்டுக்கு 39 ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி தூய்மைப் பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொரு வார்டுக்கும் 25 தூய்மைக் காவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தூய்மை அருணை சேவைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரம் நடுதல், பராமரித்தல், கால்வாய் மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட செயல்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை, காந்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள நகர்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை அமைப்பு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நாளை (16ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவிற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்குகிறார். அருணை கல்விக்குழுமங்களின் துணைத் தலைவர் எ.வ.குமரன், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநகர மேயர் நிர்மலாவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வரவேற்கிறார். விழாவில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், தூய்மை அருணை அமைப்பாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலை, இனிப்புகள், தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருட்களை வழங்கி வாழ்த்தி பேசுகிறார். விழாவில், 39வார்டு ஒருங்கிணைப்பாளர்களும், மாட வீதி ஒருங்கிணைப்பாளர்களும், தூய்மைக் காவலர்களும் கலந்து கொள்கின்றனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.குணசிங் நன்றி கூறுகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, மேற்பார்வையாளர்கள் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏ மு.பெ.கிரி, ப.கார்த்திவேல்மாறன், பிரியா ப.விஜயரங்கன் ஆகியோர் செய்து வருகின்றனர்.