வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு திருவண்ணாமலை மாநகராட்சியில்
திருவண்ணாமலை, ஜூலை 10: திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.
நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாநகராட்சிக்கான வளர்ச்சி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மாநகரின் முக்கிய சாலைகளை தரம் உயர்த்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், தெருவிளக்குகளை உயர்மின்விளக்குகளாக பராமரித்தல், குடிநீர் விநியோக திட்ட பணிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை நகரம் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டபொம்மன் தெரு, துராபலி தெரு, சன்னதி தெரு மற்றும் கல்நகர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும், கல்நகர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் திருமண மண்டப பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் முரளி, கோட்ட பொறியாளர் ஞானவேல், உதவி பொறியாளர், சசிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் பிரியா விஜயரங்கன், துரை வெங்கட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.